எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டை அணிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்லூர் ராஜூ பேட்டி
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டை அணிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
வாடிப்பட்டி,
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டை அணிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
காவி துண்டு
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த திட்டத்தின்படி அம்மா விளையாட்டு திடலில் குளியலறை அமைக்க பூமி பூஜையும், பரவை அண்ணா சிலை அருகில், சத்தியமூர்த்தி நகர் பொதுமந்தையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் திறப்பு, பரவையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் கலா மீனாராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா, சவுந்தரபாண்டியன், நாகமலை, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- காவி கொடி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். இந்த நாட்டில் கல்வி புரட்சியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அவர் மீது காவி துண்டை அணிவித்த நபரை இரும்பு கரம்கொண்டு இந்த அரசாங்கம் அடக்க வேண்டும்.
ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசு
நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது. அதை எல்லாம் கவனிக்காமல் முதல்-அமைச்சர் தனது மகனை அமைச்சராக்கி உள்ளார். பின்னர் முதல்-அமைச்சர் ஆக்குவார். மேலும், நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறார்கள். பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் முதல்-அமைச்சர் வழங்க வேண்டும். அந்த துறைக்கு அமைச்சராக நான் இருந்தபோது 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கினோம். அரிசி வாங்காமல் இருந்தாலும் கார்டு உள்ள அனைவருக்கும் நாங்கள் கொடுத்தோம்.
தற்போது அரிசி வாங்காத 3 லட்சம் கார்டுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அ.தி.மு.க.வை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரச்சினை அண்ணன், தம்பி பிரச்சினை. அது விரைவில் தீரும்.
எங்கள் கட்சியில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி தற்போது தி.மு.க.வில் நன்றாக காக்கா பிடித்து வாழ்ந்து வருகின்றார். முல்லைபெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் 2023-ல் முடிவடைந்து தொடங்கப்படும் என துரைமுருகன் கூறியுள்ளார். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி மதுரையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.