நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை குமாரபாளையத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி


நாமக்கல் மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை  குமாரபாளையத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
x

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குமாரபாளையத்தில் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

நாமக்கல்

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குமாரபாளையத்தில் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

436 பேர்

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் தாழ்வான பகுதிகளான அண்ணா நகர், கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் பின்புறம், மேட்டுக்காடு போன்ற பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நடராஜா திருமண மண்டபம், புத்தர் தெரு பள்ளி கட்டிடம், சின்னப்ப நாயக்கன்பாளையம் நகராட்சி பள்ளி கட்டிடம் ஆகிய மூன்று இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு உடை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. தற்போது குமாரபாளையம் முகாம்களில் 161 குடும்பங்களைச் சேர்ந்த 436 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை மாலை இரவு என மூன்று வேளையும் உணவுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது.

அடிப்படை தேவைகள்

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மற்றும் அரசின் சிறப்பு அதிகாரி ஆகியோர் குமாரபாளையம் முகாமிற்கு வந்தனர். பின்னர் அங்கு தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

குமாரபாளையத்தை பொறுத்தவரை பாதிக்கப்படும் மக்களுக்கு வேண்டுகிற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இப்போது தான் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிரந்தரமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிபாளையம்

இதேபோல் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளான அக்ரஹாரம், ராஜவீதி செங்குந்தர் கோவில் அருகில், ஆவாரங்காடு ஜனதா நகர், பெரியார் நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் செங்குந்தர் திருமண மண்டபத்திலும், ஆவாரங்காடு தொடக்கப்பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் ஆணையாளர் கோபிநாத் தலைமையில் வெள்ளம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த் துறையினர் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஆவாரங்காடு ஜனதா நகரில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story