மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு


மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு
x

துரையரசபுரத்தில் இயங்கிவரும் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே துரையரசபுரத்தில் இயங்கிவரும் அறந்தாங்கி-புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் உடனருந்தினர். இதையடுத்து, ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3 தொழிலாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.13 லட்சத்து 47 ஆயிரத்து 258-க்கான காசோலையையும், ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு ஈட்டிய விடுப்புதொகை ரூ.25 ஆயிரத்து 848-க்கான கசோலையையும் அமைச்சர் காந்தி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் சிறந்த தொழிலாளி ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதன்படி 12-ம் வகுப்பில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.7,500-ம், 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரமும், 10-ம் வகுப்பில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.3 ஆயிரமும், 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்படும். ஆலையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை பரிசீலனை செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ஆலை வளாகத்தில் மரக்கன்றை அமைச்சர் காந்தி நட்டார்.

ஆய்வில் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார், கைத்தறி துறை ஆணையர் விவேகானந்தன், கைத்தறி துறை கூடுதல் இயக்குனர் கர்ணன் மற்றும் துணிநூல் துறை இணை இயக்குனர் சாரதி சுப்புராஜ், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story