தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு


தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா பஸ் நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடியில் இயங்கி வந்த அண்ணா பஸ் நிலையமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.57 கோடியிலும், அம்பேத்கர் நகரில் ரூ.29 கோடியில் ஸ்டெம் பார்க் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கவும், ரூ.87 கோடி மதிப்பில் பல்வேறு கழிவுநீர் கால்வாய் பணிகளும் தொடங்கி வைக்கப்பட உள்ளன. மீன்வளத்துறை சார்பில் ரூ.9 கோடி மதிப்பில் மீன் ஏலக்கூடம், பொதுப்பணித்துறை சார்பில் கழுகுமலை எட்டயபுரத்தில் ரூ.5.63 கோடி மதிப்பில் சார் பதிவாளர் கட்டிடத்திற்கு அடிக்கல்லும் நாட்டப்பட இருக்கிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.75 கோடி மதிப்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாயநலக்கூடம் ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த தொடக்க விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வள்ர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகின்றனர்.

மதியம் 1 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் வைத்து கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை எளிய பெண்கள் 125 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தையல் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

எனவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு, அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story