விஷம் குடித்து தாய்-மகன் தற்கொலை


விஷம் குடித்து தாய்-மகன் தற்கொலை
x

மன்னார்குடியில், விஷம் குடித்து தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். தங்களை ஆதரிக்க யாரும் இல்லாததால் அவர்கள் இந்த துயர முடிவை தேடிக்கொண்டனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில், விஷம் குடித்து தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். தங்களை ஆதரிக்க யாரும் இல்லாததால் அவர்கள் இந்த துயர முடிவை தேடிக்கொண்டனர்.

ஆதரவு இல்லாததால் விரக்தி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜ பிள்ளை தெரு ஜீயர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). இவர், தனது தயார் கோமலவள்ளியுடன்(81) வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருமணமாகாத ரவிச்சந்திரன், ஆயக்காரன்புலம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

வயது முதிர்வால் உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமலவள்ளியை பார்ப்பதற்காக ரவிச்சந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த அவர் தங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குருணை மருந்தை உடல் நிலை பாதித்த தனது தாய் கோமலவள்ளிக்கு கொடுத்துவிட்டு பின்னர் ரவிச்சந்திரன் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வெகுநேரமாகியும் ரவிச்சந்திரன் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரவிச்சந்திரனும், அவரது தாயார் கோமலவள்ளியும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

தங்களை ஆதரிக்க உறவினர்கள் யாரும் இல்லாத விரக்தியில் தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story