அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியாறு கால்வாய் பாலம் இடிந்தது - சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்


அலங்காநல்லூர் அருகே  முல்லை பெரியாறு கால்வாய் பாலம் இடிந்தது  - சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
x

அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியாறு கால்வாய் பாலம் இடிந்து விழுந்தது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

மதுரை

அலங்காநல்லூர்,


அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியாறு கால்வாய் பாலம் இடிந்து விழுந்தது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

பழமையான பாலம்

அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு என்று பிரதான பாதையாக அருகே உள்ள முல்லைபெரியாறு பிரதான கால்வாயை கடக்கக்கூடிய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இப்பாலம் கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த பாலத்தை 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பாலம் மிகுந்த சிதிலம் அடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும், மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இடிந்தது

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கோடைமழையின் காரணமாக இந்த பாலம் மேலும் வலுவிழுந்தது. நேற்று மதியம் திடீரென பாலம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரும் செல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

உடனடியாக மாற்று வழித்தட பாதை அமைத்து தராவிட்டால் நான்கு கிலோமீட்டர் தூரம் சுற்றி கிராமத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த பாலத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி விட்டு இந்த கிராமத்திற்கு துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் பொதுப்பணித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story