மாயமான பெண் காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
ஜோலார்பேட்டை அருகே மாயமான பெண் காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 46), இவர்களது மகள் ஷிவாலி (வயது 23), எம்.எஸ்.சி படித்துள்ளார்.
கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் பெற்றோர்கள் தேடிய நிலையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து தாயார் ஜெயந்தி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் ஷிவாலியை குடியண்ணன் மகன் கோகுல் வாசன் (வயது 23) என்பவர் அழைத்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷிவானியை தேடி வந்தனர்.
இதனிடையே ஷிவாலி-கோகுல்வாசன் இருவரும் பெங்களூருவில் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இரு தரப்பினரும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேஜர் என்பதால் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து இரு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கினார். அதன்பின் ஷிவாலி காதல் கணவருடன் அங்கிருந்து சென்றார்.