இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை தூக்கியபடி வலம் வந்த வாலிபர்


இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை தூக்கியபடி வலம் வந்த வாலிபர்
x
தினத்தந்தி 2 Aug 2023 8:29 AM IST (Updated: 9 Aug 2023 1:04 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை தூக்கியபடி வாலிபர் வலம் வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

நாகர்கோவில்,

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ - மாணவிகளும், வேலைக்கு சென்று வந்த ஆண்களும், பெண்களும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பஸ் நிலையத்திற்கு இளம்பெண்ணும், வாலிபரும் அங்கு வந்தனர்.

திடீரென இளம்பெண்ணை, அந்த வாலிபர் தூக்கியபடி நடந்து சென்றார். சிரித்தபடியும், அந்த இளம்பெண்ணை கொஞ்சியபடியும் தூக்கி சென்றார். அதை ஒருவர் வீடியோ பதிவு செய்தார்.

முதலில் அந்த இளம் ஜோடியின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்த பொதுமக்கள் சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என கருதினர். ஆனால் அவர்கள் சினிமா படப்பிடிப்பு நடத்தவில்லை. சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்சில் பதிவிடுவதற்காக வீடியோ எடுக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. இதை தெரிந்து கொண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து விசாரித்ததில் இளம்பெண்ணும், வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும், சமூக வலைதளங்களில் வெறும் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற செயல்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story