கடம்பூர் அருகே தனியார் இடத்திலுள்ள வேலியை அகற்றிய 75 பேர் மீது வழக்கு
கடம்பூர் அருகே தனியார் இடத்திலுள்ள வேலியை அகற்றிய 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கயத்தாறு:
கடம்பூர் அருகிலுள்ள கோபாலபுரம் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன், கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த கோவில்களில் அந்த சமுதாயத்தினர் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த நிலையில் இடத்தின் உரிமையாளர், அந்த இடத்தை சுற்றி கல் மற்றும் கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் கோவிலில் சாமி தரிசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கோர்ட்டில் நடந்த வழக்கில் இடத்தின் உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று குறிப்பிட்ட சமுதாயத்தினர் கம்பி வேலியை அகற்றிவிட்டு, அந்த இடத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் போலீசார் கோபாலபுரத்தை சேர்ந்த கயத்தாறு கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் கருப்புசாமி மற்றும் 42 பெண்கள் உள்பட 75 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.