நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு
நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தாா்
நம்பியூரை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்ட உள்ளது. ஒரு சில இடங்களில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அதிகாரிகள் இரவு, பகலாக தண்ணீர் திறப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். நிச்சயமாக வரும் 15-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும்.
அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,' என்றார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.