ஓட்டப்பிடாரம் அருகே கிராம மக்கள் சாலைமறியல்; 40 பேர் கைது


ஓட்டப்பிடாரம் அருகே கிராம மக்கள் சாலைமறியல்; 40 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 16 July 2023 9:37 AM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே குறிப்பிட்ட இடத்தில் திருமணம் மண்டபம் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் நேற்றுசாலை மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திருமண மண்டபம் விவகாரம்

ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டியில் சமுதாய நலக்கூடம் பழுதடைந்து மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு பழைய பள்ளி கட்டிடம் அருகில் உள்ள காலி இடத்தில் பூமி பூஜை நடந்தது. தற்போது அதே இடத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தாட்கோ நிதி உதவியுடன் ரூ.2 கோடி செலவில் 13 சென்ட் நிலத்தில் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியிலிருந்து ரூ.7லட்சத்து 43 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சமையலறை கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

சாலை மறியல்

பள்ளி அருகில் சமையலறை கட்டிடம் கட்டுவதற்கு போதுமான இடம் இருப்பதால் ஊராட்சி நிர்வாகம் திருமண மண்டபத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பள்ளி சமையலறை கட்டுவதை நிறுத்த வேண்டும். திருமணம் மண்டபத்திற்கு பூமி பூஜை செய்த இடத்தில் மீண்டும் திருமண மண்டபம் கட்டம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் ஊராட்சி நிர்வாம் மற்றும் தமிழக அரசை கண்டித்து கிராமமக்கள் ஓட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் சாலை முப்புலிவெட்டி பஸ் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.

40 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் தலைமையில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட 40பேரை கைது செய்து ஓட்டப்பிடாரம் சேவை மைய கட்டிடத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன.


Next Story