பெருந்துறை அருகே 2 வீடுகளில் தீ விபத்து கணவன்-மனைவி உயிர் தப்பினர்


பெருந்துறை அருகே  2 வீடுகளில் தீ விபத்து  கணவன்-மனைவி உயிர் தப்பினர்
x

கணவன்-மனைவி உயிர் தப்பினர்

ஈரோடு

பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் அருகே உள்ள மாரநாய்க்கனூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது60). அவருடைய மனைவி விஜயலட்சுமி (55). கூலித்தொழிலாளிகள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களது குடிசை வீடு திடீரென தீ பிடித்துக்கொண்டது. இதைப்பார்த்ததும் பதறிப்போன கணவன்- மனைவி 2 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த சிமெண்ட் மேற்கூரையால் வேயப்பட்ட அவர்களது மற்றொரு வீட்டுக்கும் தீ பரவி எரிந்தது.

இதைத்தொடர்ந்து கோபியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 2 வீடுகளிலும் எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், ஓலை குடிசை முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. சிமெண்ட் வீடு லேசான சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதற்கான காரணம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story