டி.என்.பாளையம் அருகேஇரும்பு கம்பியால் தாக்கி கல்லூரி மாணவி படுகொலை


டி.என்.பாளையம் அருகேஇரும்பு கம்பியால் தாக்கி கல்லூரி மாணவி படுகொலை
x

டி.என்.பாளையம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.

கல்லூரி மாணவி மாயம்

கோபி அருகே உள்ள நாயக்கன்காடு கண்ணகி வீதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மஞ்சுளாதேவி. இவர்களது மகள் ஸ்வேதா (வயது 21). இவர் கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஸ்வேதா கடந்த 28-ந் தேதி கல்லூரி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு் சென்றவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

கிணற்றில் துர்நாற்றம்

இதுகுறித்து மஞ்சுளாதேவி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஸ்வேதாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள விவசாய தோட்டத்து கிணற்றில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. உடனே தோட்டத்து உரிமையாளர் அந்த கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது தண்ணீரில் மூட்டை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனே இதுபற்றி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

பெண் பிணம்

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் கிடந்த மூட்டையை எடுத்து பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு பெண் உடல் இருந்தது. அவரது முகம் மற்றும் கழுத்து பகுதியில் ரத்த காயங்களுடன் அழுகிய நிலையில் உடல் காணப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமாலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். ஈரோட்டில் இருந்து மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அப்போது நாய் கிணற்றை மட்டு்ம் சுற்றி சுற்றி வந்தது.

கொலை

பின்னர் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்ட அந்த பெண் கடந்த 28-ந் தேதி மாயமான கல்லூரி மாணவி ஸ்வேதா என்பதும், அவர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டு, உடலை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது.

ஆனால் அவர் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்?, அவரை கொலை செய்தது யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ேமலும் அவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மாணவியின் உடலை பிரேதபரிசோதனைக்காக போலீசாா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவியை கொடூரமாக கொன்று, உடலை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story