வேப்பூர் அருகேஅய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


வேப்பூர் அருகேஅய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

வேப்பூர் அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடலூர்

ராமநத்தம்,

சென்னை திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர்கள் பிரவீன்(வயது 41), வேணு மகன் நந்தகுமார்(30), ராஜகோபால்(33), பந்தல் ராஜன்(48), நரேஷ்(37), அணிஷ்(28), சரீப்(42), காந்தி(55). இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் 8 பேரும் கடந்த 22-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (38) என்பவர் ஓட்டினார். சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வேனில் ஊருக்கு புறப்பட்டனர்.

தீப்பிடித்து எரிந்த வேன்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ராமநத்தம் வெங்கானூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 10 மணியளவில் வந்தபோது வேனின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு புகை வந்த இடத்தை பார்த்தார். அப்போது என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.

உடனே சுதாகர், வேனில் இருந்த அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார். தீப்பிடித்து எரிந்ததை கண்ட அய்யப்ப பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மேலும் மணலை கொண்டு தீயை அணைக்க முயன்றனர்.

எலும்புக்கூடானது

அதற்குள் தீ, வேன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்போில் ராமநத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் வேனில் வந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story