ரூ.55 லட்சத்தில் புதிய பாலம்


ரூ.55 லட்சத்தில் புதிய பாலம்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

கனமழையால் உடைந்து விழும் அபாயத்தில் இருந்த வேடன் வயல் சாலையில் உள்ள பாலத்தை உடைத்து விட்டு, ரூ.55 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

கனமழையால் உடைந்து விழும் அபாயத்தில் இருந்த வேடன் வயல் சாலையில் உள்ள பாலத்தை உடைத்து விட்டு, ரூ.55 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

பாலத்தில் விரிசல்

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 6 மாதங்கள் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த காலத்தில் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து வருகிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலங்கள் உடைந்து உள்ளன.

இதனால் உடைந்த பாலங்களை புதுப்பிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கூடலூர் 1-ம் மைலில் இருந்து வேடன் வயலுக்கு சாலை செல்கிறது. இதன் குறுக்கே ஆற்று வாய்க்கால் உள்ளதால், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்ததால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உடையும் நிலையில் காணப்பட்டது.

ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு

இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் இயக்கப்பட வில்லை. மேலும் புதிய பாலம் கட்ட வேண்டுமென சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மூலம் புதிய பாலம் கட்ட ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள பழைய பாலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

தொடர்ந்து அதே இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக வாய்க்காலை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து புதிய பாடம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. வரும் மழைக்காலத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர். இதனிடையே புதிய பாலம் கட்டுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story