சென்னை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை -கனிமொழி எம்.பி. கோரிக்கை


சென்னை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை -கனிமொழி எம்.பி. கோரிக்கை
x

‘தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட வேண்டும்’ என தெற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம், கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நேற்று சந்தித்தார். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கினார்.

கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை

* நெல்லை - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல மும்பை - மதுரை இடையே இயக்கப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

* சென்னை-தூத்துக்குடி இடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே முன்பு இயக்கப்பட்ட ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் போல, புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட வேண்டும்.

* நெல்லை - தூத்துக்குடி இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் சேவைக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 1½ மணி நேரமாக குறைக்க வேண்டும்.

விரிவாக்கம் செய்யவேண்டும்

* திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆழ்வார் திருநகரி நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* காயல்பட்டினம், குரும்பூர் ரெயில் நிலையங்களில் நடைமேடை அளவு (21 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் சென்றுவர) உயர்த்தப்பட வேண்டும்.

* நாசரேத் ரெயில் நிலைய 2-வது நடைமேடையை 18 பெட்டிகள் கொண்ட ரெயில் நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

* தூத்துக்குடியில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடிப்பதற்கு தனியாக ரெயில்கள் இயக்குவதை விடவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயில் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

கோவைக்கு நேரடி ரெயில்

* கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி முதல் இயக்கப்படும் சென்னை - கொல்லம் சிறப்பு ரெயில் முன்பு இருந்தது போன்றே கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கடம்பூர் ரெயில்வே 'கேட்' அமைந்திருக்கும் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக கடம்பூர் ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் பறக்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும்.

* தூத்துக்குடி-கோவை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட வேண்டும்.

* தூத்துக்குடி-மேல்மருதூர் இடையே பயணிகள் ரெயில் இயக்கும் வகையில் புதிய ரெயில்வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

* திருச்செந்தூர் - நெல்லை இடையே தினசரி 4 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேம்பாலம், சுரங்கப்பாதை

* ஆழ்வார் திருநகரி ரெயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

* கோவில்பட்டியில் லட்சுமி மில் கேட், இளையரசனேந்தல் ரெயில்வே சாலை, இனாம் மணியாச்சி, தட்சிணாமூர்த்தி தெரு ரெயில்வே சாலை, ராமசாமிதாஸ் பார்க் ரெயில்வே பாதை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

* நிகிலேசன் நகர் 4-வது ரெயில்வே 'கேட்'டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அதில் இடம் பெற்று உள்ளது.


Next Story