வெளிமாநிலங்களில் புதிய வகை கொரோனா; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை


வெளிமாநிலங்களில் புதிய வகை கொரோனா; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x

வெளிமாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை

மதுரை,

வெளிமாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் ஆய்வு

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவ-மாணவியர் விடுதிகள், அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் ஆய்வு நடத்தினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் மாவட்டங்களின் மதுரை அரசு ஆஸ்பத்திரி முக்கியமானதாக இருக்கிறது. இங்கு ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. ஜெய்கா நிதி உதவியுடன் ரூ.131 கோடி மதிப்பீட்டில் அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அமைய இருக்கிறது. அந்த பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிவடையும். சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக மருத்துவ மாணவர்கள் மதுரையில் படிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக புதிய விடுதிகள், நூலகம் ஆகியவை கட்டுவதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுபோல், ரூ.20 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ வளாகமும் அமைய இருக்கிறது. மற்ற அரசு ஆஸ்பத்திரிகளை காட்டிலும் அதிக அறுவை சிகிச்சைகள், குழந்தை பேறு ஆகியவற்றில் மதுரை முக்கிய இடம் வகிக்கிறது.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல மாவட்டங்களில் நோய் தொற்று இல்லை என்ற நிலையில் உள்ளது. நேற்று 5 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் புதிய வகை அல்லது உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் கல்லூரி மாணவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். இதனால், பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்.

பலர் தடுப்பூசி போட்டு பல மாதங்கள் கடந்து விட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது. அதனால், மீண்டும் நோய் தொற்று வருவதற்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 1.21 கோடி மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டு விட்டு, 2-ம் தவணை தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். ஆனால், அவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று உள்ளது. இந்தியா, தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல், அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.


Related Tags :
Next Story