என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் நேரடி பணி நியமன அறிவிப்பு ரத்து- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் நேரடி பணி நியமன அறிவிப்பு ரத்து- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் நேரடி பணி நியமன அறிவிப்பு ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


திருச்சி என்.ஐ.டி. ஆசிரியர் சங்கம் சார்பிலும், அங்கு பணியாற்றும் பேராசிரியர் மோகன் சார்பிலும் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறி இருந்ததாவது:-

மத்திய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித்துறையின் கீழ் நாடு முழுவதும் 31 தேசிய தொழில்நுட்ப கழகங்கள் (என்.ஐ.டி.) செயல்படுகின்றன. என்.ஐ.டி.க்களின் செயல்பாடுகள், பணி நியமனங்கள், பதவி உயர்வு போன்றவை என்.ஐ.டி. மற்றும் அறிவியல் கல்வி ஆராய்ச்சி சட்டத்தின்படி செயல்படுத்தப்படுகின்றன. இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானால், என்.ஐ.டி. கவர்னர் குழு ஆலோசித்து முடிவு செய்து, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும்.

தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ள திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் இயக்குனர், துணை இயக்குனர், பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கும்போது, பதவி உயர்வு நடைமுறையை பின்பற்றாமல் நேரடியாக நியமனம் செய்யலாம் என மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதை பின்பற்றி பணி நியமன அறிவிப்பை கல்லூரி பதிவாளர் வெளியிட்டு உள்ளார். இது சட்டவிரோதம். இதை ரத்து செய்து, பதவி உயர்வு மூலமாக பணி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், என்.ஐ.டி. கல்லூரிகளில் நேரடி பணி நியமன சுற்றறிக்கையானது, கல்லூரி சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. எனவே அந்த சுற்றறிக்கையும், அதன் அடிப்படையில் வெளியான பணி நியமன அறிவிப்பும் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story