அனுமதியின்றி கட்டிடம், சாலை அமைத்த விவகாரம்; பிரபல நடிகர்களுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு
அனுமதியின்றி கட்டிடம், சாலை அமைத்த விவகாரம் தொடர்பாக பிரபல நடிகர்களுக்கு நோட்டீஸ் வழங்க வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை மலைக்கிராமத்தில் பிரபல நடிகர்கள் 2 பேர் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதுடன், சாலை அமைத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்கிடையே வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், பிரபல நடிகருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனையும் மீறி அவர் கட்டிடங்கள் கட்டியுள்ளார். அவருக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதேபோல் மற்றொரு பிரபல நடிகர், அரசு நிலத்தில் சிமெண்டு சாலை அமைத்தது குறித்தும், கனரக வாகனங்களை பயன்படுத்தியது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும், அவருக்கும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.