கட்டணம் செலுத்த முடியாததால் எட்டாக்கனியான நர்சிங் படிப்பு


கட்டணம் செலுத்த முடியாததால் எட்டாக்கனியான நர்சிங் படிப்பு
x

மருத்துவ சேவையை விரும்பிய மலைக்கிராம மாணவிக்கு, கட்டணம் செலுத்த முடியாததால் கல்வி எட்டக்கனியாக மாறியிருக்கிறது. இதனால் அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

திண்டுக்கல்

மலைக்கிராம மாணவி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெள்ளகவியை அடுத்த சின்னூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளி. அவருடைய மகள் மகாலட்சுமி (வயது 17). இவர், பிளஸ்-2 முடித்து விட்டு பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார்.

அதற்காக கவுன்சிலிங்கில் பங்கேற்ற அவருக்கு தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் கல்வி கட்டணம் செலுத்த வசதி இல்லாததால் படிக்க முடியாமல் பெற்றோருடன் கூலி வேலைக்கு செல்கிறார்.

கேள்விக்குறியான எதிர்காலம்

நர்சிங் படித்து மருத்துவ சேவையை விரும்பிய மலைக்கிராம மாணவியின் படிப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. கட்டணம் செலுத்த முடியாததால் நர்சிங் படிப்பு எட்டாக்கனியாகி விட்டது. இதுதொடர்பாக மாணவி மகாலட்சுமி கூறியதாவது:-

தேனி மாவட்டம் போடியில் பிளஸ்-2 படித்தேன். எனது பெற்றோர் கூலி வேலை செய்து படிக்க வைத்தனர். பெற்றோரின் சிரமத்தை அறிந்து நன்றாக படித்து பிளஸ்-2 தேர்வில் 470 மதிப்பெண்கள் எடுத்தேன்.

இதையடுத்து உயர்கல்வி படிக்க விரும்பினேன். அப்போது எங்களுடைய மலைக்கிராம மக்களின் சிரமம் நினைவுக்கு வந்தது. எங்கள் கிராமத்துக்கு பாதை வசதி இல்லாததால் 3 காட்டாறுகளை கடந்து சுமார் 6 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.

கல்வி கட்டணம்

இதனால் கர்ப்பிணிகள், நோயாளிகளை டோலிகட்டி 6 கி.மீ. தூரம் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். எனவே கிராம மக்களுக்கு உதவும் வகையில் பி.எஸ்சி. நர்சிங் படிக்க நினைத்தேன். ஆனால் கவுன்சிலிங்கில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அந்த கல்லூரியில் 4 ஆண்டுகள் படிக்க ரூ.1½ லட்சம் வரை செலவாகும் என்று கூறுகின்றனர். கூலி வேலை செய்யும் எனது பெற்றோரால் அது இயலாத காரியம். ஏழ்மையால் எனது உயர்கல்வி கனவு நிறைவேறாமல் போய்விடுமோ? என பயமாக இருக்கிறது. எனவே நான் பி.எஸ்சி. நர்சிங் படிப்பதற்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.

அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த மாணவியின் கனவு நனவாகுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்


Next Story