வெள்ளியங்கிரி 7-வது மலையில் இருந்து விழுந்து காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு


வெள்ளியங்கிரி 7-வது மலையில் இருந்து விழுந்து காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 23 April 2024 10:18 AM GMT (Updated: 23 April 2024 10:33 AM GMT)

எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.

கோவை,

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளியங்கிரியின் 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளார். அவரை தரிசிக்க சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் 7 மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். மேலும் மலை மேல் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்படும்.

இந்தநிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராள மானோர் மலையேறி சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 31) இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார். பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு இருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.


Next Story