தூத்துக்குடி சி.வ.குளத்தின் கரையில்ரூ.2 கோடியில் பேவர் பிளாக் நடைபாதை:கனிமொழி எம்.பி திறந்து வைத்தார


தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி சி.வ.குளத்தின் கரையில் ரூ.2 கோடியில் பேவர் பிளாக் நடைபாதையை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சி.வ. குளத்தின் கரையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள பேவர் பிளாக் நடைபாதையை நேற்று கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

நடைபாதை

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவிட்டான் சாலையில் உள்ள சி.வ.குளத்தின் கரையில் நமக்கு நாமே திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சிமெண்ட்பேவர் பிளாக் மூலம் 2 ஆயிரத்து 480 மீட்டர் நீளம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவடட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சி.வ.குளக்கரையின் வெளிப்புறத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

25 ஆயிரம் மரக்கன்று

அதன்பிறகு அவர் கூறும் போது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவிட்டான் ரோட்டில் சி.வ.குளம் 52.38 எக்டேர் பரப்பில் அமைந்து ள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டன. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரப்பட்டு குளக்கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குளக்கரையின் மேல்பகுதியில் 2 ஆயிரத்து 480 மீட்டர் சுற்றளவில் 3.50 மீட்டர் அகலம் கொண்ட சிமெண்ட் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் இந்த குளம் நிரம்பிய பிறகு மக்கள் இயற்கை அழகை ரசிப்பதற்காக இரும்பு தடுப்பு அமைப்பு 1,550 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டு உள்ளது. குளத்தின் வெளிப்பகுதியில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக ரூ.64.64 லட்சம் மதிப்பில் சொட்டுநீர் பாசனம் மற்றும் ரூ.40 லட்சம் செலவில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள குட்டத்து மாடசாமி கோவில் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

மேலும், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் மூப்பன்பட்டி, தோணுகால், சத்திரப்பட்டி, ஊத்துப்பட்டி பஞ்சாயத்துக்களில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக பரிசீலனை செய்து விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்று கூறினார். நிகழ்ச்சியில் தமிழக சமூகநல மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், உதவி கலெக்டர் கவுரகுமார், கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story