திருப்பரங்குன்றம் அருகே சமணர் படுகைக்கு செல்லும் பாதையில்பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள்


திருப்பரங்குன்றம் அருகே சமணர் படுகைக்கு செல்லும் பாதையில்பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள்
x

திருப்பரங்குன்றம் அருகே சமணர் படுகைக்கு செல்லும் பாதையில் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அனுமதி பெற்று பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் அருகே சமணர் படுகைக்கு செல்லும் பாதையில் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அனுமதி பெற்று பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமணர் படுகை

திருப்பரங்குன்றம் அருகே உள்ள கீழக்குயில்குடியில் சமணர் மலையில் தமிழி கல்வெட்டுக்கள், சமணர் படுகைகள், சமணர் சிற்பங்கள், மகாவீரரின் முழு சிற்பம் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு குடிநீர்வசதி என்பது குதிரை கொம்பாக இருந்து வருகிறது. அய்யனார் கோவிலில் இருந்து சமணர் படுகை வரை சுமார் 2.கி.மீ. தூரம் மேடு, பள்ளமாக சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் சமணர் படுகைக்கு சென்று வருவதில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் பயனாக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், கூடுதல் இயக்குனர், கலெக்டர், கூடுதல் கலெக்டர் என அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். கடந்த 2022-ல் டிசம்பர் மாத இறுதியில் சமணர் படுகைக்கு செல்லும் வழியில் ரூ.32.56 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. அதில் 4 மாதத்தில் பணி முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

தொல்லியல் துறை அனுமதி

ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலை பள்ளங்களை சமப்படுத்தும் பணி நடந்தது. மேலும் மணல், ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு ஆயத்த பணிகள் தொடங்கியது. இதற்கிடையில் தொல்லியல் துறையினர் முறையாக அனுமதி பெற்றபிறகே பணி தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனையடுத்து பணி தொடங்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நிலையூர் முருகன் கூறும்போது, கீழக்குயில்குடி சமண படுகைக்கு சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சியாளர்கள்,பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்கு வசதியாக பேவர் பிளாக் சாலை அமைப்பதை வரவேற்கிறேன். ஆனால் சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. இனியாவது தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று பணியை தொடங்க வேண்டும் என்றார். ஆணையாளர் ராமமூர்த்தி கூறும்போது, தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணி தொடங்கும் என்றார். மேலும், தொல்லியல் துறை அனுமதி பெற்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story