புகழூர் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு


புகழூர் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
x

புகழூர் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

வாய்க்கால் பராமரிப்பு

கரூர் மாவட்டம் புகழூர் வாய்க்காலில் ஆண்டுதோறும் மே மாதம் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் வாய்க்காலில் பராமரிப்பு பணியை முடித்து விட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி புகழூர் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையில் இருந்து புகழூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

தண்ணீர் நிறுத்தப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆவதால் நொய்யல் முதல் புகழூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை, வாழை, கரும்பு, நெல், வெற்றிலை, மரவள்ளி, கோரை உள்ளிட்ட விவசாய பயிர்கள் கருகி வந்தன.

தண்ணீர் திறப்பு

இதையடுத்து, கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற புகழூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையில் இருந்து பாசனத்திற்காக புகழூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, நன்செய் புகழூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக புகழூர் வாய்க்கால் சென்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story