விழுப்புரம்- திண்டிவனத்தில் 24-ந் தேதி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


விழுப்புரம்- திண்டிவனத்தில் 24-ந் தேதி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழுப்புரம்- திண்டிவனத்தில் 24-ந் தேதி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்படும். இதுதவிர பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகளும், இதனுடன் சித்த மருத்துவம், ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

உயர் சிகிச்சை

மேலும் உயர் சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பரிந்துரை செய்ய வேண்டும். அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் எளிதில் சிகிச்சை பெறும் வகையில் காவல் துறையினர் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ முகாம் நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இம்முகாம்கள் குறித்த தகவல்கள், பொதுமக்களை சென்றடையும் வகையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும். தகவல் பலகை, பதாகைகள், துண்டு பிரசுர மாதிரிகள் கொண்டு பொதுமக்களுக்கு இம்முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். முகாமை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண் யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story