ரூ.197 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை


ரூ.197 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை
x

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.197.81 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

வேலூர்

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை

வேலூர் நகரின் மையப்பகுதியில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து இங்கிருந்து பல்வேறு மருத்துவப்பிரிவுகள் அங்கு மாற்றப்பட்டன. அதனால் சில பிரிவுகளுடன் இயங்கி வந்த பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுகள் தவிர பிற கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்தது.

அடிக்கல் நாட்டினார்

இந்த நிலையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாப்பாத்தி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர் ஜெயராமன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

7 மாடி கட்டிடம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை ரூ.197 கோடியே 81 லட்சத்தில் 7 மாடிகளுடன், 3 பிளாக்குகளாக கட்டப்பட உள்ளது. இங்கு மருத்துவமனை நிர்வாகம், அவசர சிகிச்சை பிரிவு, கதிரியக்கம், இருதயம், நரம்பியல், பிரசவ வார்டு, சிறுநீரகம், குழந்தைகள் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, புறநோயாளிகள் காத்திருப்பு பகுதி, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைகிறது என்று தெரிவித்தனர்.


Next Story