பப்பாளி செடியில் வைரஸ் நோய் தாக்குதல்


பப்பாளி செடியில் வைரஸ் நோய் தாக்குதல்
x

பப்பாளி செடியில் வைரஸ் நோய் தாக்குதல்

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் பகுதியில், பப்பாளி செடியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளிபழம், வெப்பமான நிலப்பரப்பில் அதிக அளவில் வளர்கிறது. இதனால் பப்பாளி விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பப்பாளியில் ரெட்லேடி, ஜிண்டா என இருவகைகள் உண்டு. ரெட்லேடி பழத்திற்காகவும், ஜிண்டா பப்பாளிப் பால் உற்பத்திக்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதி விவசாயிகள் ரெட்லேடி பப்பாளி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து அவரப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற விவசாயி கூறியதாவது:-

கடந்த சில வருடமாக பப்பாளி விவசாயம் செய்து வருகிறோம். தண்ணீர் தேவை குறைவு, பராமரிப்பு செலவு குறைவு என்பதால், பப்பாளி விவசாயம் செய்கிறோம். 1 ஏக்கருக்கு 900 பப்பாளி நாற்றுகள் நடலாம், நாற்று நட்ட 6 மாதத்தில் இருந்து பப்பாளி பழம் அறுவடை செய்யலாம். வாரந்தோறும் ஏக்கருக்கு சுமார் 4 டன் வரை விளைச்சல் இருக்கும். 2 ஆண்டுகள் வரை பப்பாளி பழம் அறுவடை செய்யலாம். பின்னர் பப்பாளி மரம் அதிக உயரம் வளர்ந்து விடுவதால், பறிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் 2 வருடங்களுக்கு பப்பாளி விளைச்சல் எடுத்துவிட்டு மீண்டும் அவற்றை அழித்து புதிய நாற்றுகள் நட்டு விடுவோம்.

தற்போது பப்பாளியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து காய்ந்து வருகின்றன. நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால், எங்களது உழைப்பு வீணாகி நஷ்டம் ஏற்படுகிறது. இந்த சீசனில் பப்பாளிக்கு ஓரளவு விலை கிடைக்கிறது. ஆனால் வைரஸ் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன், நோய் முற்றிய செடிகள் வறண்டு விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வழியின்றி தவித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-------


Next Story