சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் ஏமாற்றம்


சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நுழைவுவாயில் பூட்டு

கிருஷ்ணகிரி, காந்தி ரோடு சாலையில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. நகரின் மையத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்டவைகளுக்கு மாத்திரை, மருந்துகளும் இங்கேயே வழங்கப்பட்டு வந்தன. கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எளிதில் வந்து சிகிச்சை பெற முடிந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நுழைவுவாயில் நேற்று திடீரென பூட்டப்பட்டு பேரிகார்டு வைக்கப்பட்டது. இனி, எந்த சிகிச்சைகளாக இருந்தாலும் போலுப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே செல்ல வேண்டும் என கூறி அங்குள்ள பணியாளர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பினர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பொதுமக்கள் சிரமம்

கடந்த சில வாரங்களாகவே அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. டாக்டர்கள் இருப்பதில்லை. ஆனாலும் நாங்கள் காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தோம். தற்போது போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 12 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அவசர சிகிச்சைக்கு வருபவர்களும், சி.டி. ஸ்கேன் உள்ளிட்டவைக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கிருஷ்ணகிரி டோல்கேட்டை கடந்த செல்ல வேண்டி உள்ளது.

இதனால் பொதுமக்கள், நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குறைந்த அளவிலான டாக்டர்கள் நியமிக்கப்பட்டு புறநோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story