முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்


முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

ஓய்வூதியம்

தமிழகத்தில் நலிவடைந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களும் சேர்ந்து ஓய்வூதியம் பெறலாம். இதற்கு சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றிபெற்று இருக்க வேண்டும்.

இதேபோல் மத்திய அரசு நடத்திய தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்த தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் நடத்திய சர்வதேச, தேசிய போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மேலும் 31.1.2023 அன்று 58 வயது நிரம்பியவராக இருப்பதோடு, தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அதோடு மாத வருமானம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் திட்டத்தில் பயன்பெற முடியாது. மேலும் முதியோர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்க இயலாது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நலிவடைந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பித்த பின்னர் 7 நாட்களுக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Next Story