"பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்" பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு


பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு
x

பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.

மதுரை,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கினார்.

நேற்று அவர், விருதுநகர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். காலை 9 மணி அளவில் காரியாபட்டி பத்திரபதிவு அலுவலகம் முன்பிருந்து தொடங்கி, பஜார் வழியாக தொண்டர்களுடன் நடந்து வந்தார். ஜெகஜீவன்ராம் தெருவில் பழுதடைந்த காலனி வீடுகளை பார்வையிட்டார். அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பனை ஓலைகளில் செய்யப்படும் பெட்டிகளை பார்வையிட்டு, அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தார். நாதசுவர கலைஞர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

பள்ளத்துப்பட்டி, அரசு ஆஸ்பத்திரி, கள்ளிக்குடி சாலை, முக்குரோடு, பஸ் நிலையம் வழியாகவும் பாதயாத்திரை மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சுழியிலும் முக்கிய வீதிகள் வழியாக சென்றார்.

கருப்பு ரிப்பன்

விருதுநகரில் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்திருந்த பாரத மாதா சிலையை போலீசார் அகற்றியதை கண்டித்து, பாதயாத்திரையின்போது அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கைகளில் கருப்பு ரிப்பன் கட்டி இருந்தனர்.

நடைபயணத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டம், கர்மவீரர் காமராஜர் பிறந்த மண். விவசாயிகளுக்கு உற்ற தோழனாக 12 அணைகளை கட்டிக்கொடுத்தவர்.

ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதியாகும். இங்கு வறுமை தாண்டவமாடுவதை பார்க்க முடிகிறது.

ஒரே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இந்த தொகுதி இருந்து வருகிறது. அதனால்தான் அடிப்படை வசதிகள் குறைந்த தொகுதியாக வைத்துள்ளனர்.

தமிழக நிதி அமைச்சரின் தொகுதிதான் இவ்வாறு இருக்கிறது என்பதை கூறும்போது வேதனையாக இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ்

அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒரு கேள்வி. கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட 12 துறைகள் மூலம், ஒரு துறைக்கு ரூ.3 கோடி வீதம் செலவழித்து உள்ளீர்கள். ஆனால், உங்கள் தொகுதியில் கலை அறிவியல் கல்லூரியானது கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், நீங்கள் எல்லாம் மதுரை எய்ம்சை பற்றி பேசுகிறீர்கள்? மதுரை எய்ம்ஸ் 2026-ல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

பிரதமர் கடந்த 2018-ல் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் 112 மாவட்டங்களை தேர்வு செய்தார். அதில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் இடம் பெற்றன.

இங்கு மத்திய அரசு, நிதி ஆயோக் மூலம் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் மாவட்டம் வளர்ச்சி அடைந்து வருகிறது. பிரதமர் மோடி செய்து கொடுத்த திட்டங்களுக்கு நன்றிக்கடனாக அவருக்கு வாக்களிக்க, மாற்றத்தை உண்டாக்க நீங்கள் தயாராகி விட்டீர்கள். நீங்கள் அதை செய்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story