மனுக்களை தரையில் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்


மனுக்களை தரையில் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் மனுக்களை தரையில் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் மனுக்களை தரையில் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில், மாவட்ட செயலாளர் ஜமால் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தலையில் பிளாஸ்டிக் பைகளை போட்டுக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னரும் அதனை நடைமுறைக்கு கொண்டு வராமல் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும், என கூறியிருந்தனர்.

மாணவர்கள் அவதி

மானூர் யூனியன் கானார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி பிரேம்குமார் தலைமையில் ஊர்மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், கானார்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அங்கு அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தனர்.

முற்றுகை போராட்டம்

நேதாஜி சுபாஷ்சேனை அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, சேரன்மாதேவி பகுதியில் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி தலைமையில் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் பாளையங்கால்வாயையொட்டி அணுகுசாலை, குறிச்சி வாய்க்கால் பாலம் முதல் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை அமைக்க பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் கால்வாயில் 10 அடிக்கு மேல் மண் பரப்பி, கால்வாயின் அகலம் குறைவதால், கால்வாயின் கரையும், அந்த பகுதியில் உள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கால்வாயில் தண்ணீர் திறந்து வருகின்ற நேரத்தில் ஊருக்குள் தண்ணீர் தேங்கி செல்ல வாய்ப்புள்ளது. எனவே ஊருக்குள் தண்ணீர் செல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

விளாகம் பகுதி மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.


Next Story