கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இருப்பினும் வரத்து குறைவால் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
கடலூர் முதுநகர்,
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 15-ந் தேதி முதல் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனா்.
அந்த வகையில் கடலூர் துறைமுகம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் தடைக்காலம் முடிந்ததும் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து கொண்டு கரைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கடலில் ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தால் மீனவர்கள் எதிர்பார்த்த மீனகள் வலையில் சிக்கவில்லை. குறிப்பாக சங்கரா, கவளை, கானாங்கத்தை உள்ளிட்ட மீன்கள் கிடைக்கவில்லை. மாறாக கனவா, கிளிச்சல் வகை மீன்கள்தான் அதிக அளவில் சிக்கியது.
கடலூர் துறைமுகத்துக்கு நேற்று 15 டன் கனவா மீன்களும், 10 டன் கிளிச்சல் மீன்களும் வந்தது.
விலை உயர்வு
மீன்பிடி தடைக்காலத்துக்கு பின் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கடலூர் துறைமுகத்தில் குவிந்தனர். ஆனால் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சங்கரா, வஞ்சிரம், காரை, கானங்கத்தை, கவளை, இறால் உள்ளிட்ட மீன்கள் வரத்து குறைவாக இருந்தது.
இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி ஒரு கிலோ ரூ.700-க்கு விற்ற வஞ்சிரம் மீன் நேற்று ரூ.1000-க்கு விற்பனையானது. இதேபோல் ரூ.100-க்கு விற்ற கானாங்கத்தை ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்ற சங்கரா ரூ.400-க்கும், ரூ.200-க்கு விற்ற நண்டு ரூ.350-க்கும், ரூ.50-க்கு விற்ற கவளை மீன் ரூ.100-க்கும், ரூ.150-க்கு விற்பனையான இறால் ரூ.300 வரை விற்பனையானது.
இது குறித்து மீன்வியாபாரி கூறுகையில், கடலில் ஏற்பட்ட நீரோட்டம் காரணமாக மீனவர்கள் எதிர்பார்த்த மீன்கள் அதிக அளவில் சிக்கவில்லை. மாறாக கனவா, கிளிச்சல் வகை மீன்கள் தான் அதிக அளவில் சிக்குகிறது. இதனை பெரும்பாலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிடுவதில்லை.
இருப்பினும் மீன்பிடி தடைக்காலம் தற்போது முடிந்துள்ள நிலையில் தங்களுக்கு பிடித்த மீன்கள் வரத்து அதிகமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். ஆனால் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சங்கரா உள்ளிட்ட மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் அவற்றின் விலை அதிகரித்தது என்றார்.