காட்டு யானைகளை விரட்டக்கோரி மறியல்
ஆடலூர் அருகே, காட்டு யானைகளை விரட்டக்கோரி விவசாயிகள் மறியல் செய்தனர்.
ஆடலூர், சோலைக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தால் கூலித்தொழிலாளிகளும் வேலைக்கு வருவதில்லை.
இந்தநிலையில் சோலைக்காட்டை சேர்ந்த பூதப்பாண்டி, பட்டத்துவேல், கோபி, பரமேஸ்வரி ஆகியோரின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்றவற்றை நாசப்படுத்தின. மேலும் இரவு நேரங்களில் அவை ஊருக்குள் வலம் வருகின்றன.
அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று ஆடலூர்-கே.சி.பட்டி மலைப்பாதையில் சோலைக்காடு பிரிவு அருகே நேற்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம், வனவர் அறிவழகன், வனக்காப்பாளர் பீட்டர் ஆகியோர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்போது அரசு மூலம் நிவாரணம் பெற்று தர ஏற்பாடு செய்யப்படும். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.