இன்று நடக்க இருந்த நடைப்பயண பேரணி ஒத்திவைப்பு


இன்று நடக்க இருந்த நடைப்பயண பேரணி ஒத்திவைப்பு
x

உள்ளிக்கடை ஊராட்சியில் சாலை வசதி செய்து தரக்கோரி இன்று நடக்க இருந்த நடைப்பயண பேரணி ஒத்திவைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை ஊராட்சியில் மாதாகோவில்தெரு, மாரியம்மன் கோவில் தெருவில் சாலை வசதி செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ச.தமிழன் தலைமையில் உள்ளிக்கடை மெயின்ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து பாபநாசம் தாசில்தார் அலுவலகம் வரை இன்று(திங்கட்கிழமை) 10 மணியளவில் 15 கிலோமீட்டர் தூரம் நடைப்பயண பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் பூங்கொடி தலைமை தாங்கினார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளிக்கடை மாதாக்கோவில் தெரு, மாதாகோவில் தெருக்களை சோந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் மக்களின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரி தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் நடைப்பயண பேரணியை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.


Next Story