பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறுவதை நம்ப தயாராக இல்லை;ஈரோட்டில் திருநாவுக்கரசர் பேட்டி


பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறுவதை நம்ப தயாராக இல்லை;ஈரோட்டில் திருநாவுக்கரசர் பேட்டி
x

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறுவதை நம்ப தயாராக இல்லை என்று ஈரோட்டில் திருநாவுக்கரசர் கூறினார்.

ஈரோடு

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறுவதை நம்ப தயாராக இல்லை என்று ஈரோட்டில் திருநாவுக்கரசர் கூறினார்.

மத்தியில் ஆட்சி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இடைத்தேர்தல் களத்தில் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மகத்தான வெற்றியை வாக்காளர்கள் தர வேண்டும். தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் தேர்தல் பணிகளை கண்காணித்து உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொருவரும் தங்களை வேட்பாளராக நினைத்து பணியாற்றி வருகிறார்கள்.

எதிர்காலத்தில் ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவதற்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு அஸ்திவாரமாக இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சிறந்த அங்கீகாரத்தை தந்து இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் நிலை

ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் தோல்வி அடைய போகிறவர்கள், பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்றுதான். அவர்கள் வெற்றி அடைய இருப்பவர்களை பார்த்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அதிகமாக ஆட்கள் சேர்க்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் இருக்கக்கூடாது என்று கூறி வந்தார். தற்போது அவர் பா.ஜ.க.வை பாராட்டி பேசுகிறார். அவரை கருவிபோல பயன்படுத்தி அ.தி.மு.க.வினர் பேச வைத்து உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு சான்றாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாக ஆடியோ வெளியாகி உள்ளது.

அரசியல் நாகரிகம்

தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் வினியோகம் போன்றவை தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனால் திருட்டு, வன்முறை போன்றவை ஏதாவது ஒரு ஆட்சியில் நடக்கவில்லை என்று கூறமுடியுமா? எல்லா ஆட்சி காலத்திலும் குற்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். எதிர்க்கட்சிகள் அதை பெரிதுபடுத்துகிறார்கள். ஆங்காங்கே தகராறு நடக்கும்போது பெரிதாகிறது.

சீமான் அதிகமான இடங்களில் தவறாகத்தான் பேசுகிறார். அவர் எந்த தேர்தலிலும் வெற்றி பெறப்போவது கிடையாது. வெற்றி பெற வேண்டும் என்றால்தானே கவனமாக பேச வேண்டும். பொதுவாக அரசியலில் கட்சிகளின் தரம் வருத்தம் அளிக்கிறது. கண்டனத்துக்குரியது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் அரசியலில் நாகரிகம் வேண்டும்.

வாய்ப்பு இல்லை

பிரபாகரனை எத்தனை பேர் பார்த்தேன் என்று கூறினாலும் சரி, ஆனால் நான் பார்த்து இருக்கிறேன். எம்.ஜி.ஆர். வீட்டில் பிரபாகரன் காலை உணவு சாப்பிட்டபோது நான் உடனிருந்தேன். ஆனால் அவர் உயிரோடு இருக்கிறார் என்று யார் சொன்னாலும் சரி நான் நம்ப தயாராக இல்லை. அதற்கான வாய்ப்போ, சாத்திய கூறுகளோ இருப்பதாக நான் கருதவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, விஜயராஜன், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், நிர்வாகிகள் ஈ.பி.ரவி, ராஜேஷ் ராஜப்பா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story