விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 2079 பேருக்கு பரிசு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
நெல்லிக்குப்பம்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் தடகளம் உள்பட பல்வேறு போட்டிகளில் சுமார் 12,629 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடலூர் அருகே குமாரபுரம் கிருஷ்ணசாமி என்ஜினீயர் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார்.
ரூ.41½ லட்சம் பரிசு
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2079 பேருக்கு ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, கிருஷ்ணசாமி கல்லூரி சேர்மன் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.