சி.பி.ஐ.க்கு எதிராக மதுரை ேகார்ட்டு வாசலில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


சி.பி.ஐ.க்கு எதிராக மதுரை ேகார்ட்டு வாசலில்  ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
x

சி.பி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை கோர்ட்டு வாசலில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

மதுரை,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட 64 பேர் நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜரானார்கள். சி.பி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை கோர்ட்டு வாசலில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு வழக்கு

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடந்தது. திடீரென போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை வெளிவராது, எனவே சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று, இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

64 பேர் ஆஜர்

அந்த குற்றப்பத்திரிகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 101 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது 27 பேர் ஆஜரானார்கள். இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 64 பேர் ஆஜரானார்கள். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட கோர்ட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, துப்பாக்கிச்சூடு வழக்கில் போலீஸ்காரர்கள் ஒருவரைக்கூட சேர்க்காததற்கு சி.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவிக்கிறோம், இதனால் இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வலியுறுத்துகிறோம் என்று கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் இதுகுறித்து வக்கீல் வாஞ்சிநாதன் கூறுகையில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணைய விசாரணை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இந்த வழக்கில் ஒரு போலீஸ்காரரைக்கூட குற்றவாளியாக சேர்க்காத விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும். சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்க உள்ளோம்", என்றார்.


Next Story