நடுவீரப்பட்டு அருகே கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு


நடுவீரப்பட்டு அருகே கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

நடுவீரப்பட்டு அருகே கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

நடுவீரப்பட்டு

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்து 2020-ம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான 2 ½ ஏக்கர் விளை நிலத்தை குத்தகை விடுவதற்கான ஏலம் 22-ந்தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கோவில் முன்பு நிலத்தை குத்தகைக்கு விட ஏலம் விடும் பணியில் செயல் அலுவலர்கள் சிவக்குமார், ரமேஷ் பாபு, ஞானசுந்தரம் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர், கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதற்கு முன்பு நாங்கள் இந்த விளை நிலத்தை ஏலத்தில் எடுத்து பயிர் செய்து வருகிறோம்.

எனவே தற்போது நிலத்தை யாருக்கும் ஏலம் விடக்கூடாது. என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம்

தொடர்ந்து அவர்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள், மேற்படி நிலத்தை உடனடியாக ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பதற்றம்

இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 15 நாட்களுக்குள் மீண்டும் நிலத்தை குத்தகைக்கு விட ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அங்கு பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story