பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல்


பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியல்
x

குறிப்பிட்ட நேரத்தில் தாழக்குடியில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

குறிப்பிட்ட நேரத்தில் தாழக்குடியில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட நேரத்துக்கு...

தாழக்குடியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்காக அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். இதேபோல் ஏராளமானோர் வேலைக்கு செல்லவும் பஸ்களையே நம்பி உள்ளனர்.

இதற்காக தினமும் நாகர்கோவில், ஆரல்வாய்மொழியில் இருந்து தடம் எண் 33, 33 டி எனபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களைத் தான் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்தனர்.

மாணவர்கள் சாலை மறியல்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தாழக்குடிக்கு காலையில் 7.30-க்கு வர வேண்டிய பஸ்கள் வரவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கும், வேலைக்கு செல்வோரும் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். தினமும் இதே நிலை நீடித்ததால் நேற்று காலையில் மாணவ, மாணவிகள் திடீரென தாழக்குடி பஸ் நிறுத்தம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக முன்னாள் பேரூராட்சி தலைவர் ரோகிணி அய்யப்பன் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 5 நிமிடம் மட்டும் மறியலில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இனிமேலும் பஸ்களை சரியான நேரத்துக்கு இயக்கவில்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என முன்னாள் பேரூராட்சி தலைவர் ரோகிணி அய்யப்பன் தெரிவித்தார்.


Next Story