தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்


தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்
x

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்த வேண்டுமா என்பது குறித்து ஆசிரியர்கள், ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.

அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால் தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப் படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

காரணங்கள்

கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.

தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புள்ளி விவரங்கள்

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.

கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளவயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

தமிழ்நாடு 2-வது இடம்

இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.

மனநல ஆலோசனை

மாணவச் சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.

அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.

இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனநல மருத்துவர், ஆசிரியை, பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

விளையாட்டு - உடற்பயிற்சி

மனநல மருத்துவர் ராம்பிரகாஷ் (திண்டுக்கல்):- கல்வி, குடும்ப சூழல், செல்போன் மற்றும் தவறான நண்பர்களால் ஏற்படும் தீய பழக்கங்களால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இது தொடக்கத்தில் லேசான சோகத்தை ஏற்படுத்தும். பின்னர் அதுவே அதிகரித்து, தனிமை, விரக்தி, ஆர்வமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். இறுதியில் வாழ்வில் வெறுத்து தற்கொலை செய்யும் எண்ணம் உருவாகிறது. ஒருமுறை தற்கொலை எண்ணம் வந்துவிட்டால் அடிக்கடி வரும். எனவே தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம். இதை தவிர்க்க தனிமை, சோகத்தில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதேபோல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சையோடு மனநல சிகிச்சையும் அவசியம். இதற்கு மனநல மருத்துவரை அணுகலாம். இதேபோல் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை மனஅழுத்தத்தை குறைக்கும். எனவே பள்ளிகளில் விளையாட்டு பாடவேளையில் மாணவர்களை அவசியம் விளையாட அனுமதிக்க வேண்டும். அதேபோல் பள்ளி, கல்லூரிகளில் மனநல வகுப்பு, நிபுணர்கள் மூலம் பயிற்சி நடத்துவதும் நல்ல பலனை தரும். மேலும் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மனநல வகுப்பு

ஆசிரியை பிரபா (திண்டுக்கல்) :- மாணவ-மாணவிகளிடம் அடிக்கடி ஆசிரியர்கள் இயல்பாக பேச வேண்டும். அதன்மூலம் மாணவ-மாணவிகளிடம் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு இருக்கிறது. அதை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட வைப்பதற்கு விளையாட்டு, ஓவியம், கலை என ஏதேனும் ஒன்றில் மாணவ-மாணவிகளை ஈடுபடுத்த வேண்டும். பள்ளிக்கு சரியாக வராத மாணவர்கள், வகுப்பில் கவனக்குறைவாக இருக்கும் மாணவர்களை கண்டறிந்து ஆசிரியர்கள் பேசினாலே பிரச்சினை தீர்ந்து விடும். வெளிநாடுகளில் மாணவர்களுக்கு மனநல வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உடல்நல குறைவு ஏற்பட்டாலே மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. எனவே மனநல வகுப்பு கொண்டு வந்தால் மாணவர்களுக்கு நன்மை தரும்.

குடும்ப தலைவி சிந்து (பழனி) :- கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்கள் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. சிறு, சிறு விஷயங்களுக்கு கூட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு கல்வி சுமை, தேர்வுகள் போன்றவற்றால் ஏற்படும் மனஅழுத்தமே காரணம். எனவே மாணவர்கள் பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் மனநலனை வளர்க்க வேண்டும். அதற்கேற்ப பாடத்திட்டங்களை கொண்டு வருவது மிகவும் அவசியம். மேலும் மாணவர்களுக்கு மனவலிமை ஏற்படும் வகையில் மனநல வகுப்புகளை கொண்டு வந்தால் மிகவும் நல்லது. அதன்மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story