மழை, வெள்ள பாதிப்பு: திமுக, அதிமுக-வை குற்றம் சொல்ல இது நேரமில்லை- கமல்ஹாசன்


மழை, வெள்ள பாதிப்பு: திமுக, அதிமுக-வை குற்றம் சொல்ல இது நேரமில்லை- கமல்ஹாசன்
x
தினத்தந்தி 9 Dec 2023 1:58 AM IST (Updated: 9 Dec 2023 9:09 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்பேட்டையில் வெள்ள நிவாரணப் பணிகளை நடிகரும், ம.நீ.ம. கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொடங்கிவைத்தார்.

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் வெள்ள நிவாரணப் பணிகளை தொடங்கிவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

குறுகிய காலத்திற்குள் கனமழை பெய்து வருவது சமீபகாலமாக வட இந்தியாவிலும் உலகின் சில பகுதிகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. இது சவாலான காலகட்டம். பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற பேரழிவுகள் அடிக்கடி நிகழும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதற்கு நாம் தயாராக வேண்டும்.

இயற்கை பேரிடர்களை தடுப்பது குறித்து எந்த அரசியல்வாதியாலும் உறுதியளிக்க முடியாது. திமுக, அதிமுக-வை குற்றம் சொல்ல இது நேரமில்லை. இதுபோன்ற பேரிடர்களை தடுக்க, புதிய வழிகளை கண்டறிய பேரிடர் மேலாண்மை துறை வல்லுநர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.

இப்போது அரசு செய்ய வேண்டியது நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி நோய் பரவாமல் தடுப்பதுதான். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள், முறையான கிருமிநாசினிக்குப் பிறகே பயன்படுத்தப்பட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 5,000 வெள்ள நிவாரணப் பெட்டிகளை முதற்கட்டமாக எங்களது மாவட்ட செயலாளர்கள் விநியோகம் செய்வார்கள். 5,000 பேருக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது, அது தேவைப்படும் வரை செயல்படும். " இவ்வாறு அவர் கூறினார்.


Next Story