ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி 80 சதவீதம் நிறைவு


ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி 80 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 21 Dec 2022 7:00 PM GMT (Updated: 21 Dec 2022 7:00 PM GMT)

தேனி மக்களின் 32 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் பணிகள் முழுமை பெறும் என்றும் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் தெரிவித்தார்.

தேனி

32-வது வார்டு

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தி.மு.க. பிரமுகரான வக்கீல் செல்வம் 32-வது வார்டின் கவுன்சிலராகவும், நகராட்சி துணைத்தலைவராகவும் உள்ளார். இந்த வார்டு மற்றும், 29, 30, 31 ஆகிய வார்டுகளில் பயணிக்கும் வகையில் தேனியாறு ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

துணைத்தலைவர் செல்வம் இந்த பணிகளை தினமும் ஆய்வு செய்து வருகிறார். நேற்றும் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணியை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜவாய்க்கால்

தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து தொடங்கும் ராஜவாய்க்கால், தாமரைக்குளம் கண்மாய் வரை உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் விவசாயம் செழித்ததோடு, மக்களுக்கான குடிநீர் தேவையையும் பூர்த்தி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்து போனது. மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் என்ற போதிலும், மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூர்வாரும் பணிகள் நடந்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன் அறிவுரையின்பேரிலும், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் ஆகியோரின் முயற்சியாலும் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

12 சிறு பாலங்கள்

தற்போது வரை 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மிச்சமிருக்கும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் முழுமை பெறும். தடுப்பணை மதகில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு அந்த தண்ணீர் குளத்துக்கு செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அதுபோல், 32-வது வார்டு பகுதியில் கடந்த ஓராண்டு காலத்தில் 12 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை பணி, தெருவிளக்குகள் பராமரிப்பு போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் சுகாதாரத்தில் மேம்பட்ட வார்டாக மாற்றப்படும். தெருப் பாதைகள் சீரமைப்பு, குடியிருப்பு விரிவாக்கம் அடைந்த பகுதி மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பேன். வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இணைப்பு வழங்கப்படாத பகுதிகளில் விரைவில் முழுமையாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை எந்த நேரத்திலும் என்னிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story