பெண் டாக்டர் தற்கொலை குறித்து 13 பேரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை


பெண் டாக்டர் தற்கொலை குறித்து 13 பேரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை
x

மேட்டுப்பாளையத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பெண் டாக்டர் தற்கொலை செய்தது குறித்து 13 பேரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பெண் டாக்டர் தற்கொலை செய்தது குறித்து 13 பேரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

பெண் டாக்டர் தற்கொலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி டாக்டர் செந்தாமரை. இவர் மேட்டுப்பாளையம் கெண்டையூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவர்களது மகள் ராசி (வயது 27). எம்.பி.பி.எஸ். படித்து உள்ளார். இவருக்கும், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்த அபிஷேக் (30) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அபிஷேக் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இதற்கிடையே ராசி முதுகலை (எம்.எஸ்., எம்.டி) பட்டம் பெற நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து படித்து வந்தார். டாக்டர் ராசி வீட்டின் 3-வது மாடி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு எழுதுவது குறித்து ராசி அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் தற்கொலை செய்த பெண் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராசி திருமணமான 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் நேற்று மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பிணவறையில் வைத்திருந்த ராசியின் உடலை பார்வையிட்டார். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்ட ராசியின் பெற்றோர், கணவர் அபிஷேக் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

தற்கொலை குறித்து 13 பேரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டார். அப்போது தாசில்தார் மாலதி உடனிருந்தார். விசாரணைக்கு பின்னர் ராசியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கை மற்றும் கோவை வடக்கு ஆர்.டி.ஓ.வின் அறிக்கை வந்த பின்னர் தான் பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணம் தெரியவரும்.


Next Story