மழை தாக்கம் குறைந்தது; மீட்பு பணிகள் தீவிரம்


மழை தாக்கம் குறைந்தது; மீட்பு பணிகள் தீவிரம்
x

கூடலூரில் கனமழை தாக்கம் குறைந்தது. கிராமப்புறங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் கனமழை தாக்கம் குறைந்தது. கிராமப்புறங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2 வாரங்களாக கனமழை

கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனால் மின்வினியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கூடலூரில் இருந்து மசினகுடி செல்லும் சாலை மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று 5-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் கூடலூரில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு தொடங்கி விடியற்காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மழையின் தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

மீட்பு பணிகள் தீவிரம்

ஆனால் நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அடியோடு குறைந்தது. தொடர்ந்து காலை 11 முதல் மாலை 4 மணி வரை வெயில் காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் நகரில் பொதுமக்களின் நடமாட்டமும் அதிகரித்தது. மேலும் மாயாறு, பாண்டியாறு, ஓவேலி, பொன்னானி உள்ளிட்ட முக்கிய ஆறுகள் தவிர மீதமுள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஓரளவு குறைந்தது.

இதற்கிடையே தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லியில் இருந்து போஸ்பாராவுக்கு செல்லும் சாலையில் மூங்கில்கள் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மூங்கில்களை பல்வேறு சிரமங்களுக்கு இடையே அறுத்து அகற்றினர். இதேபோல் கிராமப்புற பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின்வினியோகம் முறையாக கிடைக்காத கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மரம் விழுந்தது

குந்தா அணையில் இருந்து 5-வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 வாரத்திற்கு பின்னர் நேற்று ஊட்டியில் மழை குறைந்தது. காலை முதலே நன்றாக வெயில் அடித்தது. இதனால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். தொடர் மழை காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், நேற்று ஏ.டி.சி. சாலையில் மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.


Next Story