25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க மறுப்பு.. பெற்றோர் மீது போலீசில் புகார் கொடுத்த வாலிபர்
திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒரு வாலிபர் புகார் அளிப்பதற்காக வந்தார். அந்த புகார் மனுவில், தனக்கு 25 வயது ஆகிவிட்டது என்றும், ஆனால் தனக்கு திருமணம் செய்து வைக்க தனது பெற்றோர் மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த புகார் மனுவை பார்த்த போலீசார், அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த வாலிபரின் பெற்றோரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் தங்கள் மகன் பற்றிய விவரங்களை கூறினர். எங்கள் மகன் இதுவரை எந்த ஒரு வேலைக்கும் செல்லவில்லை. மோட்டார் சைக்கிள் வாங்கி தந்தால் வேலைக்கு போகிறேன் என்றான். இதை நம்பி நாங்களும் வண்டி வாங்கி கொடுத்தோம். ஆனாலும் வேலைக்கு எங்கள் மகன் செல்லவில்லை. இவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என்று நாங்கள் யோசிக்கிறோம் என்று அவனது பெற்றோர் போலீசாரிடம் கூறினர்.
இதையடுத்து அந்த வாலிபரிடம் வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி வரன் அமையும். முதலில் வேலைக்கு சென்று நல்ல பிள்ளையாக இருங்கள், பெற்றோர் உன்னை மாப்பிள்ளையாக்கி விடுவார்கள் என்று அறிவுரை கூறி அந்த வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நூதன புகார் குறித்து விசாரணை நடந்ததால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.