புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம்
புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம்
திருப்பூர்,
திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பதிவாளர் ராமசாமி தலைமை தாங்கினார். நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அளித்த மனுவில், 'திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள திருப்பூர் டவுன், ஆண்டிப்பாளையம் கிராமம், இடுவாய் கிராமம், மங்கலம் கிராமம் போன்ற கிராமங்களில் இருந்து நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வர 15 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. உரிய பஸ் வசதி இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வீரபாண்டி கிராமத்தை உள்ளடக்கியும், மங்கலம், இடுவாய், ஆண்டிப்பாளையம் கிராமங்களை சேர்த்து வீரபாண்டியில் புதிதாக ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தை அமைக்க வேண்டும்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏராளமான சிறு, குறு விவசாயிகள், விவசாயம் செய்து வருகிறார்கள். குறைந்தபட்சம் சுமார் 1 ஏக்கர், ½ ஏக்கர் பூமி வைத்துள்ளவர்கள் தங்கள் வாரிசுகள் 3 பேருக்கு, 4 பேருக்கு பிரித்து கொடுத்தாலும் அது விவசாய பூமி தான். ஆனால் பிரித்து கொடுத்தாலோ, விற்பனை செய்தாலோ பல இடங்களில் பத்திரப்பதிவு செய்வதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். வீரபாண்டி பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க கூட்டத்தில் பங்கேற்றவர்களும் கோரிக்கையாக வைத்தனர்.
----