போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு


போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு
x

திருச்சிற்றம்பலம் அருகே போலி ஆவணம் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 49). இவருக்கும், இவர்களது உறவினர்களுக்கும் சொந்தமான பூர்வீக நிலம் களத்தூர் கிராமத்தில் உள்ளது. இந்த இடத்தினை இதுவரை யாரும் பாகப்பிரிவினை செய்து கொள்ளவில்லை.

இந்தநிலையில், இந்த சொத்தின் உரிமையாளர்களில் ஒருவரான குழந்தைசாமி, அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (50) என்பவருக்கு குறிப்பிட்ட இடத்தை தன்னிச்சையாக விலைபேசி, கடந்த ஜூன் மாதம் பேராவூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்த தகவல் நிலத்தின் ஏனைய உரிமையாளர்களுக்கு சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது.

போலி ஆவணம்

இதுகுறித்த தகவலின்பேரில், களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் சம்பந்தப்பட்ட இடத்தின் உண்மை தன்மையையும், வருவாய்த்துறை ஆவணங்களையும் ஆய்வு செய்தார். அப்போது தற்போதைய களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பெயரில், அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உதவியுடன் போலியாக ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை பத்திரப்பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் செருவாவிடுதியில் உள்ள திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தைசாமியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.






Next Story