பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை


பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை
x

பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை பெரம்பலூரில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் லாடபுரம், திருவாளந்துறை, வேள்விமங்களம், சிறுகன்பூர் கிழக்கு கொட்டரை ஆகிய கிராமங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லாடபுரம் சின்ன ஏரியில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மூலம் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டார்.

அப்போது தீயணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர் காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை, இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றின் இயக்கம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

வெள்ள நேரங்களில் பொதுமக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்து செல்வது குறித்த செயல்விளக்கம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.


Next Story