பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம்


பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி  இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம்
x

கொட்டாம்பட்டி அருகே பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுப்பாதை

கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பாதையை அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று கருங்காலக்குடி கிராமத்தை சேர்ந்த சங்கிலி என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய வந்தபோது பாதையை ஆக்கிரமித்து செயல்படுவதாக தனிநபரை கண்டித்து அவரது வீட்டின் முன்பு பாதையில் சடலத்தை இறக்கி வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

சுமார் 2 மணி நேரமாக சடலத்தை அடக்கம் செய்ய செல்லாமல் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மேலூர் வட்டாட்சியர் சரவணப்பெருமாள், கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரபாலாஜி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு இறந்த சங்கிலியின் உடலை அடக்கம் செய்தனர்.


Next Story