நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நிறுத்தி இருந்த பழுதான வாகனங்கள் அகற்றம்


நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நிறுத்தி இருந்த பழுதான வாகனங்கள் அகற்றம்
x

நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நிறுத்தி இருந்த பழுதான வாகனங்கள் அகற்றப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது மண்டல பகுதியில் கந்தபுரம் காலனி உள்ளது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி நகராட்சியாக இருந்த போது பயன்படுத்தப்பட்டு சேதமடைந்த வாகனங்களை இந்த வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். காலப்போக்கில் வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் மரங்கள் வளர்ந்து காடுகள் போல மாறியது. அங்கு விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாட தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் பாக்கியலட்சுமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்ப்ரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் இருந்த 15-க்கும் மேற்பட்ட வாகனங்களை கிரேன் எந்திரங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்தார். சுகாதார அதிகாரி பாண்டியராஜன் தலைமையில் நேற்று காலை தொடங்கிய அந்த பணி மாலை வரை நடைபெற்றது. அங்கிருந்து அகற்றப்பட்ட பழுதடைந்த வாகனங்கள் விஸ்வநத்தம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பழுதடைந்த வாகனங்கள் அனைத்தும் ஏலம் விட ஏற்பாடு செய்ய இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Next Story